வேலாயுதம்பாளையம், ஆக. 8: புகளூரில் கோரைபுள்ளில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் தவுட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருவள்ளுவர். விவசாயி. இவரது நிலத்தில் பாய் தயாரிக்கும் கோரை பயிர் செய்திருந்தார். கோரை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் கோரையில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் காரணமாக தீ மளமளவென பரவ ஆரம்பித்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கோரையில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை.
தகவலறிந்த புகளூர் காகித ஆலை தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்தனர். கோரையில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீய அருகில் உள்ள விவசாயத் தோட்டங்களுக்கு தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் சுமார் ஒரு ஏக்கருக்கும் மேல் கோரை தீயில் எரிந்து கருகியது.