பொன்னமராவதி, ஆக. 29: பொன்னமராவதி வழியாக மதுரைக்கு ரயில் சேவை துவங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதியில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ரயில் சேவைக்கு மதுரை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு சென்று தான் ரயில் பிடிக்கவேண்டும். இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் ரயிலை சுற்றுலா சென்று தான் பார்க்கவேண்டிய நிலையுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய நகரங்களில் பொன்னமராவதியும் ஒன்று. வர்த்தகர்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் ரயில் சேவை இல்லாததால் வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கு நீண்ட தூரம் சென்று ரயில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. மேலும் சரக்கு ரயில் இருந்து எந்த பொருளும் நேரடியாக கொள்முதல் செய்து இங்கு கொண்டு வந்துவிடலாம். அது இல்லாமல் இருப்பதால் அதிக கட்டணம் கொடுத்து லாரி சர்வீசில் போடவேண்டியுள்ளது.
எனவே இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிக்கு புதிய ரயில் சேவை தொடங்க வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி வழியாக மதுரைக்கும், திருச்சியில் இருந்து பொன்னமராவதி வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்கி இப்பகுதி பொதுமக்களுக்கு எளிதாக போக்குவரத்து வசதி செய்து கொடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.