பொன்னமராவதி,நவ19: பொன்னமராவதி பகுதியில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. நாள் முழுவதும் மேகமூட்டமாக காணப்பட்டது. நாள் முழுதும் பெய்த சாரல் மழையில் மழைநீர் திரண்டு கூட ஓடவில்லை, தூரலும் சாரலுமாக இருந்துள்ளது. மழை பெய்யும் என எதிர்ப்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சாரல்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். சிறு, குறு வியாபாரிகள், சாலை ஓரங்களில் கடைகள் அமைத்து வியாபராம் செய்யும் அனைத்து தரப்பினரும் இந்த சாரல் மழையால் மிகுந்த பொருளாதாரம் பாதிப்பு அடைந்தனர். மிதமாக பெய்யத சாரல் மழையால் நாள் முழுவதும் குளிர்ச்சியான நிலை காணப்பட்டது. மதியம் சிறிது நேரம் வெயில் அடித்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.


