விராலிமலை, அக்.13: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல்,குடுமியான்மலையில் நேற்று முன்தினம் இரவு 220 மில்லி மீட்டர் பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெய்த நிலையில் விராலிமலை பகுதிகளில் போதிய அளவு மழை பொழிவு இல்லாமல் பொய்த்து போனது இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று நினைத்திருத்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சியது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி பெரும்பாலான பகுதிகளில் பெய்து வருகிறது. இந்த மழை வரும் டிசம்பர் வரை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதில் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருமயத்தில் 68.60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
மேலும்,அன்னவாசல் 67 மி.மீ, இலுப்பூர் 62 மி.மீ, குடுமியான்மலை 51.80 மி.மீ, விராலிமலை 39 மி.மீ என மொத்தம் 220 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது . இது சென்டி மீட்டர் அளவில் 22 ஆகும். தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்து நிலத்தடி அதிகரித்துள்ளது.