கந்தர்வகோட்டை, செப்.13: தச்சன்குறிச்சி ஊராட்சியில் மூடிக்கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், தச்சன்குறிச்சி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் தச்சன்குறிச்சி ஊராட்சியில் மாநில நிதி குழு மானியம் திட்டம் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டு வந்தது.
இதில், ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் எடுத்து சுத்தகரிப்பு செய்து குடம் ரூ.5க்கு மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஏழை எளிய மக்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைத்தது. இந்நிலையில், இந்த சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் பழுதுதடைந்துள்ளதால், இப்பகுதி மக்கள் குடிநீருக்கு மிகுந்த சிரமமடைகின்றனர். எனவே, தச்சன்குறிச்சி ஊராட்சியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை சீர் செய்து, சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் வழங்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.