புதுக்கோட்டை, நவ.12: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரிஅரசு துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க புதுக்கோட்டை வட்டத் தலைவர்தமிழரசன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரசிங் தொடக்க உரையாற்றினார்.தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்சம் ரூ.7850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
