கறம்பக்குடி, செப். 12: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நகர் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக நாய்கள் அதிகமாக சுற்றித் தெரிகின்றன. அதில் குறிப்பாக வெறி நாய்களும் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பயத்துடன் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் கறம்பக்குடி நெய்வேலி ரோடு பகுதியில் நடந்து வந்த அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (60), மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தர்மதுரை(30). நெய்வேலி ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபு (34) ஆகியோரை அந்த பகுதியில் நின்றிருந்த வெறிநாய் ஒன்று துரத்தி, துரத்தி கடித்தது.
இதில் காயமடைந்த மூன்று பேரும் கறம்பக்குடி உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று 2 பேர் திரும்பி உள்ளனர். ரவிச்சந்திரன் மட்டும் தொடர் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து உடனடியாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தவுடன், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அங்கும் இங்கும் அலைந்து திரிந்த வெறி நாயை அடித்து கொன்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.