கந்தர்வகோட்டை, அக்.9: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுக்கா, பிசானத்தூர் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்க இருப்பதாகவும், இந்த ஆலைக்கு திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள உயிரி கழிவுகளை இங்கு அமைக்கப்படும் ஆலையில் பிரித்து அழிக்கப்படுவதாகவும் இதனால் இந்த பகுதியில் உள்ள குடிநீர் ஆதாரம், விவசாயம் சுற்றுச்சூழல் காற்று மாசினால் இப்பகுதி பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட மிக அபாயகரமான நோய் பாதிப்பு ஏற்படும்.
இதனால் இந்த பகுதியை சுற்றியுள்ள பல கிராமங்கள் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த ஆலையை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (9ம் தேதி) கந்தர்வகோட்டை தனியார் திருமண மண்டபத்தில் இந்த ஆலை அமைவது குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் பிசானத்தூர், பழைய கந்தர்வகோட்டை, காடவராயன்பட்டி, மட்டங்கால், துருசுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து மாபெரும் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல சமூக நல சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை மக்கள் மத்தியில் பேசினார்.