புதுக்கோட்டை, அக். 8: புதுக்கோட்டை மாவட்டத்தில் 489 கிராம ஊராட்சிகள் கிராமசபை கூட்டங்கள் வரும் 11ம் தேதி நடைபெறும் என்று கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காந்தி ஜெயந்தி தினமான கடந்த 2.10.2025ம் தேதியன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
வரும் 11.10.2025 அன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராம சபை ஒப்பதல் பெறுதல், சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம் மற்றும் இதரப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.