புதுக்கோட்டை, நவ.6: புதுக்கோட்டை மாவட்டத்தில் 9000 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி பணி மும்முரம் தரமான விதை விற்பனை செய்ய விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு ரபி பருவத்தில் சுமார் 9000 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள், தற்போது பெய்துவரும் பருவமழையினை பயன்படுத்தி, நிலத்தினை தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா அவர்கள் தலைமையில், விதை ஆய்வாளர் பாலையன், நவீன் சேவியர் உட்பட அதிகாரிகள் ஆலங்குடியில் உள்ள கடலை விதை விற்பனை நிலையங்களைஆய்வு செய்தனர். அப்போது, விதை சட்ட விதிகளை கடைபிடிக்கவும், நல்ல முளைப்பு திறன் உள்ள தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யவும் அறிவுரை வழங்கினார்கள். ஆலங்குடி அனைத்து தனியார் நிலக்கடலை சங்கம் உள்ளிட்ட அனைத்து விதை விற்பனையாளர்களுக்கும் நல்ல முளைப்பு திறன் கொண்ட விதைகளை விற்பனை செய்திட சுற்றறிக்கை நேரில் வழங்கப்பட்டது.
மேலும், விதை விற்பனை உரிமங்கள் பெற்ற தனியார் விதை விற்பனையாளர்கள் அனைவரும் விதை சட்ட விதிகளை பின்பற்றி தரமான விதைகளை விற்பனை செய்யவேண்டும் எனவும், மீறுவோர் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதை விதிகள் 1968 விதிகளின் படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Pudukkottai_061125_1
