கறம்பக்குடி, ஆக.5: கறம்பக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூடை பின்னும் தொழிலாளி இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்த ஆத்தங்கரை விடுதி ஊராட்சி கீழவாண்டான் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமயன்(56), கூடை பின்னும் தொழிலாளி. இவருக்கு, விஜயா என்ற மனைவியும், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் கறம்பக்குடிக்கு கூடை விற்பனை செய்வதற்காக வருகை புரிந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அந்த வழியாக வந்தவர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று அவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். கூடை பின்னும் தொழிலாளி ராமன் சிகிச்சை பலனின்றி நேற்று விடியற்காலை இறந்துவிட்டார். இது குறித்து, அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராமனின் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.
+