புதுக்கோட்டை, டிச.11: பல்வேறு துறைகளின் சார்பில் 136 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, திட்டத்தில் பயன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்தார் . புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், குழந்தைவிநாயகர் கோட்டை கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை - மலைப்பயிர்கள் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 136 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட கலெக்டர் தெரிவித்தாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாதந்தோறும் ஒரு குக்கிராமத்தை தேர்வு செய்து, மக்கள் தொடர்பு முகாம் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், குழந்தைவிநாயகர் கோட்டை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில், தமிழக அரசு பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுசுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சி மூலம் பொதுமக்கள் தமிழக அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்துகொண்டு பயனடையலாம்.
மேலும், இம்முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும். அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின்கீழ் பயன்பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இம்மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுவின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு செயல்படுத்தி வருவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இதுபோன்று நடைபெறும் முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் எனவும் பேசினார்.இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்; .ஐஸ்வர்யா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்). முனுசாமி, இணை இயக்குநர் (வேளாண்மை). சங்கரலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா, அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.


