கந்தர்வகோட்டை, செப். 2: கந்தர்வக்கோட்டையில் திங்கள் கிழமை வாரச்சந்தையில் பொதுமக்கள் ஆர்வமுடன் காய்கறிகள், கீரைகளை வாங்கிச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரில் திங்கள்கிழமை வாரச் சந்தையில் நேற்று பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான வியாபாரிகள் லோடு வாகனங்களிலும், இருசக்கர வாகனங்களிலும் காய்கறி, கருவாடு, மீன், கீரை, சோளப்பொறி, பலசரக்கு உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்தனர். வார சந்தையில் குறைவான விலையில் பொருள்கள் வாங்க கந்தர்வக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளிலும், இருசக்கர வாகனங்களிலும், நடந்து வந்தும் தங்கள் வீடுகளுக்குத் தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கினர்.
அதில், தக்காளி ரூ.20க்கும், வெங்காயம் 20, கத்தரி காய் 40, பின்ஸ், கேரட், அவரை ஆகியன கிலோ 60, உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும் விற்பனையாகின. மேலும், தேங்காய் கிலோ 80 ரூபாய் என விற்பனை ஆனது.
வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறி விலை குறைவாக உள்ளது என நிம்மதியடைந்தாலும, தேங்காய் விலை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், மாலையில், மேகக்கூட்டங்கள் திரண்டு, சில்லென காற்று வீசியதால், மழை வருமோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் கவலையடைந்தனர்.