புதுக்கோட்டை தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் நிமிர்ந்து நில் திட்ட உயர்மட்ட மேலாண்மை கூட்டம்
புதுக்கோட்டை, செப். 2: புதுக்கோட்டை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நிமிர்ந்து நில் திட்டம் தொடர்பான உயர்மட்ட மேலாண்மை கூட்டத்தினை மாவட்ட கலெக்டர் அருணா நேற்று தொடங்கி வைத்து, புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு விளம்பர அட்டைகளை கல்லூரி முதல்வர்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், அவர் கூறியதாவது: ‘உயர்கல்வி பயிலும் மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவிற்கான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ‘நிமிர்ந்து நில்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற அடிப்படையில் தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ‘நிமிர்ந்து நில்\” திட்டம் தொடர்பான உயர்மட்ட மேலாண்மை கூட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பிரச்சினைகளை கண்டு பயப்படக் கூடாது மாறாக அந்த பிரச்சனையில் இருந்து ஒரு புதிய வணிகத்திற்கான யோசனையை எவ்வாறு கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலையும், எதிர்பார்ப்பையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் மற்றும் முக்கிய பொறுப்பு அனைத்து கல்லூரிகளுக்கும் உண்டு என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. எனவே, மாணவர்கள், அனைவரும் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி செயலாளர் முனைவர்.கவிதா சுப்பிரமணியன், மன்னர் கல்லூரி முதல்வர் முனைவர்.புவனேஸ்வரி, மாவட்ட திட்ட மேலாளர்கள் (தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) ஆபிரகாம் லிங்கன் (புதுக்கோட்டை), அருமை ரூபன் ஜோசப் (சிவகங்கை), புதுக்கோட்டை மாவட்ட மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் கருப்பையா, புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.