ஈரோடு,ஜூலை11: பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம்,பெருந்துறை தாலுகா, கருமாண்டிசெல்லிபாளையம், காடபாளையத்தில் பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
நல்ல முறையில் செயல்பட்டு வரும் இந்த கடன் சங்கத்தை தற்போது இரண்டாக பிரித்து, கருமாண்டிசெல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் என புதிய சங்கம் அமைத்து தர வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.அவ்வாறு பிரித்து கொடுத்தால் சங்கம் நலிவடையவே வழிவகுக்கும். ஏற்கனவே சங்கம் அமைந்துள்ள இடமானது கருமாண்டிசெல்லிபாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட காடபாளையத்தில் தான் இருக்கிறது. இந்த இடம் அனைத்து பகுதியினருக்கும் ஏற்ற மத்திய பகுதியாகவும், போக்குவரத்து அதிகம் உள்ள இடமாகவும் மற்றும் கூட்டுறவு வங்கி கிளை, கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை அருகிலேயே உள்ளது.
இதனால் அனைவரும் அங்கு வந்து தங்களது சேவைகளை எளிதில் பெற முடியும்.
ஆனால், இச்சங்கத்தை பிரித்து புதிதாக அமைக்கப்படும் சங்க எல்லையில், கிராம நிர்வாக அலுவலரின் சான்றின்படியே 1,832.97 ஹெக்டர் நிலப்பரப்பு மட்டுமே இருப்பதாக தெரிய வருகிறது. எனவே, அரசாணையின் தகுதியை முழுமையாக கொண்டிருக்காத நிலையில்,பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பிரித்து, கருமாண்டி செல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் என புதியதாக அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.