Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குன்றத்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

குன்றத்தூர், ஜூன் 4: குன்றத்தூர் முருகன் கோயிலில் வரும் 9ம்தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்றத்தூர் மலை மீது பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. சுமார், 1000 ஆண்டுகள் பழமையான இக்கோயில், தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமானால் வழிபட்ட தலமாக கருதப்படுகிறது. இக்கோயிலுக்கு சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

தமிழ் புத்தாண்டு, வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் ஆகிய முருகனுக்குரிய விழாக்கள் அனைத்தும் இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வரும் 9ம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, தற்போது இருந்தே இக்கோயிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன், ஒரு கட்டமாக பல்லாவரம், பூந்தமல்லி, போரூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் எளிதாக கோயிலுக்கு வருகை தரும் வகையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

மேலும், பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில், 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய் விரைவு கட்டண தரிசன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு வருகை தரும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோர் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில், விரைவு கட்டண தரிசனத்தில் இலவசமாக சென்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆங்காங்கே தற்காலிக கழிப்பறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கைத்தேர்ந்த மருத்துவர்கள் குழுக்கள் மூலம் இலவச சிகிச்சை மையமும், உயிர் காக்கும் வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.

வழக்கம்போல் அல்லாமல் அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.