Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு

தூத்துக்குடி, ஜூன் 25: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் இளம்பகவத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா, வரும் ஜூலை 7ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் வீதம் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்திடும் வகையில் குடிநீர் வடிகால் வாரியம் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். நகராட்சி பகுதிகள், தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள், தற்காலிக பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சுகாதார வசதி, நிழற்பந்தல், குடமுழுக்கு நிகழ்ச்சியினை பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் அகன்ற எல்இடி திரை வசதிகள், தேவையான இடங்களில் எல்இடி விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, இந்து சமய அறநிலையத்துறை இணைந்து உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும்.

திருச்செந்தூர் நகர்ப்புற பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடமுழுக்கு நாளில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்பாடு செய்ய வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையாக நின்று சுவாமி தரிசனம் செய்வதற்கு காவல் துறையினர் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். திருச்செந்தூர் நகர் முழுவதும் போக்குவரத்து வாகனங்களை கட்டுப்படுத்தி, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படா வண்ணம் போக்குவரத்து காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட்ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம், தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் சரவணக்குமார் (நெடுஞ்சாலைகள்), லொரைட்டா (நெடுஞ்சாலைகள்), சிவசுப்பிரமணியன் (நிலஎடுப்பு, உடன்குடி), திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) பிரியதர்ஷினி, இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார், தாசில்தார் பாலசுந்தரம், நகராட்சி ஆணையர் கண்மணி, நகராட்சி பொறியாளர் சரவணன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கோவில்பட்டியில் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது கோவில்பட்டி, ஜூன் 25: கோவில்பட்டியில் போலீசை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி கிழக்கு போலீஸ் எஸ்ஐ சண்முகம் தலைமையில் போலீசார், இலுப்பையூரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இங்குள்ள கோயில் அருகே அரிவாளுடன் நின்றிருந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். அப்போது, அவர், போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவரை பிடித்து கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அவர், இலுப்பையூரணி மேட்டுத்தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் உத்தண்டு (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.