பட்டிவீரன்பட்டி, ஜூலை 23: பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் நேற்று ஆடி மாத பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சந்தனம், விபூதி, பால், தேன், இளநீர், மஞ்சள் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோயில், அய்யம்பாளையம் அருள்முருகன் கோயில் மலைகோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயில், காந்திபுரம் சிவன் கோயில், சித்தரேவு திருச்சிற்றம்பல ஆவுடையப்பர் கோயிலிலும் நடந்த பிரதோஷ பூஜைகளிலும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.