திருச்சி, ஜூலை 9: திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு உச்சிகால பூஜையில் முக்கனிகளை கொண்டு அபிஷேகம் நடந்தது. திருச்சி மாவட்டத்தின் அடையாளமாக திகழ்கிறது, மலைக்கோட்ைட மட்டுவார் குழலம்மை தாயுமான சுவாமி கோயில். இங்கு தாயுமான சுவாமியை தரிசித்தால் கர்ப்பிணிகளுக்கு சுக பிரசவம் நடக்கும் என்பது ஐதீகம். இதானால் இங்கு திருச்சி மட்டுமல்லாது வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அந்த வகையில் பிரதோஷமான நேற்று உச்சிகால பூஜையில் சுவாமி தாயுமான ஈசனுக்கு முக்கனிகளான மா, பலா, வாழைப்பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வளர்பிறை பிரதோஷத்தையொட்டி சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பிரகாரங்களில் வலம் வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் உமா லட்சுமணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.