சோதனையில் ரூ.16 லட்சம் பணத்துடன் சிக்கிய வாலிபர் ஹவாலா பணமா என வேலூரில் போலீசார் விசாரணை ஆம்னி பஸ்சில் வந்த இளம்பெண்ணை போட்டோ எடுத்தார்
வேலூர், ஜூலை 11: ஆம்னி பஸ்சில் பயணம் செய்த இளம்பெண்ணை போட்டோ எடுத்த வாலிபரை வேலூரில் போலீசார் பிடித்து சோதனை ெசய்ததில் அவரிடம் ₹16 லட்சம் பணம் சிக்கியது. இது ஹவாலா பணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் இருந்து தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் கணவருடன் பயணித்துள்ளார். வேலூருக்கு முன்பு உள்ள மாதனூர் பகுதியில் உணவுக்காக பஸ்சை டிரைவர் நிறுத்தியுள்ளார். அப்போது அந்த பெண் மற்றும் அவரது கணவர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பஸ்சில் ஏறி உள்ளனர்.
அப்போது பஸ்சில் இருந்த ஒருவர் அந்த பெண்ணை செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். இதை கவனித்த இளம்பெண் அந்த நபரிடம், ‘ஏன் என்னை போட்டோ எடுத்தாய்?’ என கேட்டு செல்போனை காண்பிக்குமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் மறுத்ததும், தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். பெண்ணின் கணவரும் அந்த வாலிபரிடம் போனை காட்டுமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபர் மறுத்துவிட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த வாலிபரின் போனை பறித்து பெண்ணின் கணவர் பார்த்துள்ளார். அதில் அந்த இளம்பெண்ணின் போட்டோ இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த போட்டோக்களை அழித்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆம்னி பஸ் வேலூருக்கு வந்ததும் வேலூர் வடக்கு போலீசார் கிரீன் சர்க்கிள் பகுதியில் சென்று பஸ்சில் இருந்த வாலிபரை பிடித்து கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த சையது இத்ராஸ் (27) என்பது தெரிய வந்தது. மேலும், அவரது பையை போலீசார் சோதனை செய்துள்ளனர். அதில் கட்டுக்கட்டாக ரூ.16 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சையதை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சையது இத்ராஸ் கொண்டு வந்த பணம் ஹவாலா பணமா? அல்லது அது யாருடைய பணம் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.