தர்மபுரி, ஜூலை 14: வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து பழைய தர்மபுரியில், நெல் நாற்று நடவு பணிகள் தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள் ஆகியவை முக்கிய சாகுபடி பயிர்களாகும். மாவட்டத்தில் தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிபட்டி ஒன்றியங்களில் 24 ஆயிரம் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழையை நம்பி ஆடிப் பட்டத்திற்காக பழைய தர்மபுரியில் இயந்திரம் மூலம் விவசாயிகள் நேற்று உழவு பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், தர்மபுரியில் தென்மேற்கு பருமழை பரவலாக பெய்துள்ளது. தற்போது ஆடிப்பட்டத்தில் பொன்னி நெல் நடவு செய்ய முடிவு செய்துள்ளோம். பழைய தர்மபுரி, மதிகோன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் அளவிற்கு நெல் பயிரிடப்படுகிறது. வடகிழக்கு பருவமழை போதிய அளவிற்கு பெய்தால் நெல் சாகுபடியில் எதிர்பார்த்த அளவிற்கு மகசூல் கிடைக்கும் என்றனர்.