பாடாலூர், அக.31: செட்டிகுளத்தில் சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட செட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் பாடாலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து, அந்த பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணிடம் இருந்த கைப்பையை திறந்து பார்த்தபோது, அதில் 6 கிராம் தங்க நகைகள், சான்றிதழ்கள், வங்கி புத்தகம் ஆகியவை இருந்தது. அந்த ஆவணங்களை வைத்து விசாரித்தபோது, அவர் திருச்சி -துறையூர் தாலுகா மெய்யம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் மனைவி சரண்யா (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண்ணின் தம்பி மனோகர், அக்கா விமலா ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெரம்பலூர் வந்த அவர்களிடம் இளம்பெண் குறித்து விசாரித்தனர். அதில் இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் கையெழுத்து பெற்று கொண்ட போலீஸார் இளம்பெண்ணை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
 
  
  
  
   
