குன்னம், அக்.31: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம் பேரூராட்சி தலைவர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம் கடந்த மூன்று தினங்களாக ஒவ்வொரு நாளும் ஐந்து வார்டுகள் வீதம் மொத்தம் உள்ள 15 வார்டுகளிலும் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் (பெர) ருக்மணி முன்னிலையில் பொதுமக்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை மனுவாக கொடுத்தனர்.
மேலும், தற்சமயம் மழைக்காலம் என்பதால் வெள்ளாற்றில் தொழுதூர் அணைக்கட்டில் இருந்து நீர்வரத்து அதிகம் வர வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் இறந்து போன சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே இந்த துயர சம்பவம் இனிமேலும் நடைபெறாத வண்ணம் ஆற்றின் கரைகளை உயர்த்தி கட்ட வேண்டியும், பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து பஸ்களும் பேருந்து நிலையம் உள்ளே சென்று வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுக்கள் அளித்துள்ளனர். கூட்டத்தில் துணைத் தலைவர் ரசூல் அகமத் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
  
  
  
   
