பெரம்பலூர், ஆக.30: பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வேளாண் துறை சார்பில் மாவட்டத்தில் பெய்த மழையளவு, உரங்கள் கையிருப்பு மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை சராசரியாக 861 மி.மீ, மழையளவாகும். மாவட்டத்தில் 2025 ஆகஸ்ட் மாதம் பெய்ய வேண்டிய மழையளவு 75.00மி.மீ., பெய்த மழையளவு 128.18மி.மீ, ஆகும். 2025 ஆகஸ்ட் வரை பெய்ய வேண்டிய மழையளவு 270மி.மீ., பெய்த மழையளவு 341.56மி.மீ, ஆகும். விதை கொள்முதலை பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல் 95.743 டன், சிறுதானியங்களில் 5.680 டன், பயறுவகைகளில் 6.675 டன், எண்ணெய்வித்து பயிர்களில் 11.237 டன், இருப்பில் உள்ளன.
தோட்டக்கலைதுறையின் மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பரப்பு அதிகரித்தல், சிப்பம் கட்டும் அறை அமைக்கும் பணிகளும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மாடித் தோட்ட தளைகள், பழச்செடிகள் தொகுப்புகள் வழங்குதல், பண்ணை கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் மற்றும் காளான் குடில் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
வேளாண் பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் தனிநபர் விவசாயிகளுக்கு மானியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளை தூர்வாருதல், மின்மோட்டார் மாற்றிக் கொள்ள மானியம் வழங்குதல் போன்ற பணிகளும் நடைபெற்றுவருகின்றன.