அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறலாம் அரும்பாவூரில் நாளை நலம்காக்கும் ஸ்டாலின் முகாம்: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
பெரம்பலூர், ஆக.29: பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, அரும்பாவூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை (30ம் தேதி) \”நலன் காக்கும் ஸ்டாலின்\” திட்ட மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இம் மருத்துவ முகாமில், பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பதிவு பெறாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் நோய்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பதிவு பெறாதவர்களை நல வாரியத்தில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமிற்கு வரும் பதிவுபெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள், தங்களது தொழிலாளர் நல வாரிய அட்டையுடனும் மற்றும் பதிவுபெறாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண், ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயதுக்கான ஆவணம், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இதற்கு முன் சிகிச்சைபெற்ற ஆவணம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.