பெரம்பலூர், ஆக.22: கலெக்டர் அலுவலக சாலையில் கோரைபுற்கள் புதர்போல் மண்டிக் கிடக்கும் துறைமங்கலம் ஏரிக்கான வரத்து வாய்க்காலை வடகிழக்கு பருவமழைக்கு முன்பு சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சங்கிலி தொடர்ச்சி வரத்து வாய்க்கால்கள் கொண்ட ஏரிகள் அதிகம் உள்ளன.
இதில் பிரதானமாக லாடபுரம் பெரிய ஏரியில் இருந்து நிரம்பி வரும் தண்ணீர் வரத்து வாய்க்கால் வழியாக, மேலப்புலியூர் ஏரி, குரும்பலூர் பாளையம் பெரிய ஏரி, செஞ்சேரி ஏரி, அரணாரை ஏரி, பெரம்பலூர் மேலஏரி, பெரம்பலூர் கீழ ஏரி எனப்படும் வெள்ளந்தாங்கி அம்மன் கோயில் ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பி, துறைமங்கலம் பெரிய ஏரிக்கும் பின்னர், துறைமங்கலம் சின்ன ஏரிக்கும் தண்ணீர் சங்கிலி தொடர்ச்சியாக சென்று சேரும்.
இதில் நகரின் மையத்தில் தெற்கே அமைந்துள்ள வெள்ளந்தாங்கி அம்மன் கோயில் ஏரியிலிருந்து துறைமங்கலம் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்லக்கூடிய சுமார் 2 கிமீ நீளமுள்ள வரத்து வாய்க்கால் தற்போது கோரைப்புற்கள் முட்புதர்போல் மண்டிக் கிடக்கிறது. இதனால் வரக்கூடிய வடகிழக்கு பருவமழையால் பெருகிவரும் மழைநீர் செல்வதற்கு தடையாக, குறிப்பாக அடர்ந்து மண்டி கிடக்கும் புதர்களால் தண்ணீர் தடைபட்டு வாய்க்கால் கரைகளை அறுத்துக் கொண்டு வெளியேறினால் அருகில் உள்ள நிலப்பரப்புகளுக்கு சென்று வீணாகும் நிலை உள்ளது.
எனவே வடகிழக்கு பருவமழை பெய்யும் முன்பாக போர்க்கால அடிப்படையில் துறைமங்கலம் பெரிய ஏரிக்கு செல்லும் வரத்து வாய்க்காலில் புதர்களை அகற்றி தண்ணீர் எளிதில் பெரிய ஏரியை சென்றடைய நீர்வள ஆதாரத்துறைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு ஏரிப்பாசன விவசாயிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் கொடுத்துள்ளனர்.