பெரம்பலூர், ஆக.22: அரும்பாவூர் பேரூராட்சிக் கூட்டத்தில், வடிகால் அமைத்தல், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று (21ம் தேதி) காலை பேரூராட்சியின் கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
பேரூராட்சி துணைத் தலைவர் சரண்யா, பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சியின் இளநிலை உதவியாளர் சரண்ராஜ் தீர்மானங்களை வாசித்தார். இந்தக் கூட்டத்தில் அரும்பாவூர் பேரூராட்சியில் 2025-26 ம் ஆண்டு பொது நிதித் திட்டத்தின்கீழ், அ.மேட்டூர் 11வது வார்டு, பாரதியார் சாலையில் மேல் மூடியுடன் கூடிய வடிகால் அமைத்தல் பணிகள் ரூ.4.30 லட்சத்தில் மேற்கொள்வது.
2025-26 ஆம் ஆண்டு 15-வது நிதிக்குழு மான்யத் திட்டத்தின்கீழ், ரூ.8 லட்சத்தில் அரும்பாவூர் பொது மயானத்தில் 2 கான்கிரீட் தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்தல் மற்றும் அ.மேட்டூர் வார்டு எண் 15 மயானத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தல், மேலும் ரூ13.50 லட்சத்தில், வார்டு எண் -6 வள்ளலார் தெருவில் வடிகால் அமைத்தல், 2025-2026ம் ஆண்டு 15வது நிதிக்குழு மான்யத் திட்டத்தின்கீழ் ரூ15லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண் 15, விஜயபுரம் ரோட்டோரம் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மன்றத்தின் அனுமதியுடன் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.