பாடாலூர், நவ.19: பாடாலூர் அருகே துக்க வீட்டிற்கு பந்தல் அமைக்கச் சென்றவர் மின்சாரம் தாக்கி இறந்தார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் மகேஷ்குமார் (50). இவர், பந்தல், மற்றும் ஒலி ஒளி அமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அதே பகுதியில் பொம்மாயி என்பவர் துக்க நிகழ்ச்சிக்கு பந்தல் போட சென்றபோது, அங்கிருந்த மீட்டர் பெட்டியின் மீது கிடந்த வயரை எடுத்து பந்தல் மீது போட முயன்றார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மின் வயர், மேலே சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி மீது விழுந்தபோது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிறுவாச்சூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மகேஷ்குமார் இறந்தார். இதுகுறித்து, தகவலறிந்து வந்த பாடாலூர் போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, பாடாலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


