பெரம்பலூர்,நவ.19:பெரம்பலூர் நகராட்சி, பழைய பஸ்டாண்டு காந்தி சிலை அருகே, பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட பகுதியில், சாலையோரக் கடைகள் வைத்துநடத்த அனுமதி கேட்டு சிஐடியு தொழிற்சங்கத்தினர் மற்றும் விற்பனை குழு உறுப்பினர்கள், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினியை நேரில் சந்தித்து அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :
பெரம்பலூர் பழைய பஸ்டாண்டு காந்தி சிலை அருகே சாலையோர கடைகள் வைக்க, நகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதனை கண்டித்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தின் கெடுபுடியால் கடைநடத்த முடியாமல், 40 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் நாங்கள் மாற்றிடம் கிடைக்காமல் அவதிப்படுகிறோம்.
தலைமைத் தபால்நிலைய பகுதியில் செயல்படும் சாலையோர வியாபாரிகளுக்கு பழைய பஸ்டாண்டு உட்புறம் உள்ள காலி இடத்தை ஒதுக்க வேண்டும் என்று கேட்டாலும் நகராட்சி நிர்வாகம் தர மறுக்கிறது. எனவே, மாவட்டக் கலெக்டர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு கடைவைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


