ஜெயங்கொண்டம் அரசு கல்லூரிக் கலைத்திருவிழாவில் ஆயகலைகளை கற்று மாணவர்கள் கலைத்திறனை வளர்த்து கொள்ள வேண்டும்
ஜெயங்கொண்டம், செப்.19: ஆயகலைகளை கற்று மாணவர்கள் தங்களால் இயன்ற கலைத்திறன்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் கல்லூரிக் கலைத்திருவிழா முன்னாள் முதல்வர் அறிவுரை வழங்கினார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் நோக்கில் தமிழக அரசு ”கல்லூரிக் கலைத்திருவிழா 2025” எனும் பல்வேறு 32 போட்டிகள் நடத்தும் பொருட்டு ரூ.2 லட்சம் சிறப்பு நிதி உதவி ஒதுக்கி அதன் துவக்கவிழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்த்துறைத் தலைவர் வடிவேலன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் முதல்வர்(பொ) இராசமூர்த்தி தலைமை வகித்து உரையாற்றினார். கல்லூரியின் முன்னாள் முதல்வர் இரமேஷ் தனது சிறப்புரையில் ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் குறிப்பிட்டு மாணவர்கள் தங்களால் இயன்ற கலைத்திறன்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று எடுத்துரைத்தார். தன் அகர்பத்தி நிறுவன பொதுமேலாளர் தொழில் சிலம்பரசன் தனது சிறப்புரையில் மாணவர்கள் தங்கள் கல்வியறிவுடன், படைப்புத்திறனையும், புதிய கண்டுபிடிப்புகளையும் கண்டு தங்களுக்கும், நாட்டிற்கு பயனுள்ளதாக அமையவேண்டும் எனக் கூறினார்.
இறுதியில் தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் ராயதுரை நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் வேல்முருகன் தொகுத்து வழங்கினார். விழாவில் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர், அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நேற்று 18 ம்தேதி முதல் துவங்கி அக்டோபர் 8 ம் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.