Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் சபரிமலை செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கம்: அதிகாலை முதலே சரண கோஷத்துடன் வழிபாடு

பெரம்பலூர், நவ.18: கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் நேற்று பெண்கள், சிறுவர் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து மண்டல விரதத்தைத் தொடங்கினர். கேரளமாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்கான நடை நேற்று முதல் திறக்கப்பட்டது. இதையடுத்து, சபரிமலை சென்றுள்ள பக்தர்கள் பதினெட்டாம் படியேறி ஐயப்ப தரிசனத்தை துவக்கினர். அதையடுத்து, தமிழகத்திலுள்ள ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதத்தின் முதல் தேதியில் மாலை அணிந்து, ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்களுக்கு விரதமிருந்து, இருமுடி கட்டிக்கொண்டு சபரி மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்து வழிபட்டு விட்டு வருவது வழக்கம். அதன்படி, பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி நடைதிறக்கப்பட்டு, சரண கோஷத்துடன் இந்த ஆண்டின் வழிபாடுகள் வேதஆகம முறைப்படி பூஜைகளுடன் தொடங்கின.

பெரம்பலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கத் தலைவரான குருசாமி வள்ளி ராஜேந்திரன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் சைக்கிள் ராஜேந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர் வெங்கடாஜல வாண்டையார், செயலாளர் முத்தையா, பொருளாளர் வேலுசாமி ஆகியோர் வழிநடத்த, மாலை அணிந்து விரதம் தொடங்கி வைக்கப்பட்டது. காலை 6.30 மணிக்கு கோபூஜை, கூட்டு வழிபாடு நடைபெற்றது. அனைத்து ஸ்வாமிகளுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்விக்கப்பட்டுபிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் பெரம்பலூர் மட்டுமன்றி சிறுவாச்சூர், எளம்பலூர், விளாமுத்தூர், நெடுவாசல், தண்ணீர்பந்தல், குரும்பலூர், அரணாரை, நொச்சியம் உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பெண்கள், சிறுவர் உள்பட 600க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரி மலைக்குச்செல்ல விரதம் இருந்து, வரிசையில் வந்து திரளாகக் கலந்து கொண்டு, குருசாமிகளிடம் மாலை அணிந்து பஜனையுடன் வழிபாடு செய்தனர்.

இதன்படி 600க்கும் மேற்பாட்டோர் நேற்று ஒரே நாளில் மாலை அணிந்து கொண்டதால் பெரம்பலூர் துறையூர் சாலையில் கனரா வங்கி முதல் ஐயப்பன் சுவாமி கோவில் வரை சரண கோஷங்களுடன் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மகரஜோதி வரைக்கும் பெரம்பலூர் ஐயப்பன் திருக் கோவிலில் தினந்தோறும் காலையில் கோபூஜையும், அதனைத் தொடர்ந்து கூட்டு வழிபாடும், பிறகு இரவு கூட்டு வழிபாட்டுடன்அன்னதானமும் தொடர்ந்து நடைபெறும் என அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.