ஜெயங்கொண்டம், நவ.18: சம்பா நெல்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான தேதியை வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேளாண் துறை சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நடப்பாண்டு சம்பா நெல் பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 15ம் தேதி கடைசி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனினும் சம்பா நெல் நடவுப் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால் சம்பா நெல் பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். எனவே, நவம்பர் 30ம் தேதி வரை சம்பா நெல் பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டதால் காப்பீட்டிற்கான கடைசி தேதியை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
திருமானூர் வட்டாரத்தில் இன்னும் சம்பா நெல் பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்து மழை வெள்ளத்தால் பயிர் சேதம் ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகை பெற்றுப் பயனடையுமாறு வேளாண்மைத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. திருமானூர் வட்டார விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு செய்யலாம். சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய செலுத்த வேண்டிய காப்பீட்டுத் தொகை ரூ.577.50 மற்றும் பெறக் கூடிய இழப்பீட்டுத் தொகை ரூ.38500/- ஆகும்.
விவசாயிகள் தங்கள் பயிரை காப்பீடு செய்ய முன்மொழிவு படிவம், விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். பொது சேவை மையத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கு விண்ணப்ப படிவம் மற்றும் முன்மொழிவுப் படிவம் தேவையில்லை. எனவே, திருமானூர் வட்டாரத்தில் சம்பா நெல் பயிருக்கு இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் அனைவரும் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பயன்படுத்தி தங்கள் சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து பயனடையுமாறு திருமானூர் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


