பெரம்பலூர், நவ.12: பெரம்பலூரில் தேசிய சட்டப் பணிகள் தினத்தைமுன்னிட்டு இன்று காலை நீதிமன்றம் முன்பிருந்துமினி மாரத்தான் போட்டிநடைபெறுகிறது என பெரம்பலூர் சார்புநீதிபதி சரண்யா தெரிவித்தார். இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், பெரம்பலூர் சார்பு நீதிபதியுமான சரண்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :
தேசிய சட்டப் பணிகள் ஆனை குழு சார்பாக, ஆண்டுதோறும் நவம்பர் 9ஆம் தேதியை தேசிய சட்டப் பணிகள் தினமாக அறிவித்துள்ளதை முன்னிட்டு, அன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாக இருந்ததால், இன்று (12 ஆம் தேதி) புதன்கிழமை பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், தேசிய சட்டப் பணிகள் தினத்தையொட்டி, பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக போதை ஒழிப்பு- எதிர்ப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
இந்த மினி மாரத்தான் போட்டியினை பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமாகிய பத்மநாபன் கொடியசைத்துத் துவங்கி வைக்கிறார். இதில், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பணிபுரியும் அனைத்து நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களும், போட்டியாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
எனவே, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் பங்கேற்கலாம் என பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், பெரம்பலூர் சார்பு நீதிபதியுமான சரண்யா வெளியிட்டுள்ள அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
