அகரம்சீகூர் பகுதியில் அசுர வேகத்தில் செல்லும் இருசக்கர வாகனங்களால் மக்கள் அச்சம்: சாட்டையை சுழற்ற காவல்துறைக்கு கோரிக்கை
குன்னம், நவ. 12: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் பகுதியில் அசுரவேகத்தில் அதிக சிசி பைக்கில் செல்லும் இளைஞர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அகரம்சீகூர் பகுதி நான்கு முனை சந்திப்பு இடமாகும் கிழக்கே செந்துறை, மேற்கே பெரம்பலூர், வடக்கு திட்டக்குடி, தெற்கு அரியலூர் என போக்குவரத்து நிறைந்த நான்கு பகுதிகள் சந்திக்கும் இடமாகும்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்; அன்றாடம் பணிமுடித்து வீடு திரும்புவோர் என மாலைநேரங்களில் ஏராளமானோர் வீடுதிரும்புவோர் பேருந்துகளை விட்டு இறங்கிச் செல்வதும், இந்த பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லவும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மாலை நேரங்களில் அதிக சிசி திறன்கொண்ட நவீன ரேஸ் பைக்குகளில் அசுரத்தனமாக இளைஞர்கள் பைக்கில் செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் நடமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அதிவேக வாகன இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அரியலூர், பெரம்பலூர் சாலைகளில் வேகத்தைடைகள் இருந்தன. இந்த வேகத்தைடகள் கிராமத்திற்கு குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணிகளுக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன் வேகத்தடைகள் அகற்றினர். பின்னர், அதை மீண்டும் போடாமல் விட்டனர். இதனால், இளைஞர்களை பைக்ரேசில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
இந்த நான்கு முனை சந்திப்பிலிருந்து 100 அடி தூரத்தில் டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. குடிமகன்கள் டாஸ்மாக் சென்று விட்டு வரும்போது அனைவரையும் பயமுறுத்தும் விதமாக அதிவேகத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர். இதுகுறித்து, இப்பகுதி மக்கள் காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து மாலை வேலைகளில் தீவிரமாக கண்காணித்து அதிவேக பைக்குகளை மடக்கி சாட்டையை சுழற்றவேண்டும் என காவல்துறையினருக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
