பாடாலூர், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பகுதியில் லாரிகளில் அனுமதியின்றி சோலிங்கற்கள் ஏற்றி செல்லப்படுவதாக அப்பகுதியினர் புவியியல் மற்றும் சுரங்க துறைக்கு ரகசிய தகவல் அளித்தனர். ஆலத்தூர்கேட் பெட்ரோல் பங்க் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை மடக்கி நிறுத்திய அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், அந்த லாரியில் பெரம்பலூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து அனுமதியின்றி 6 யூனிட் சோலிங்கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சோலிங்கற்களுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.