ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு: வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ஜெயங்கொண்டம், அக். 8: ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் வழக்குகள் கையாள்வது குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்த அவர், வழக்குகள் குறித்த கோப்புகள் கையாள்வது குறித்தும் அங்கிருந்த மகளிர் போலீசாரிடம் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் காவல் நிலைய பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், காவல் நிலையத்தின் சுற்றுப்புறத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினார். போக்சோ உள்ளிட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்க ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சக்கரவர்த்தி மற்றும் காவல் ஆய்வாளர் நாகவள்ளி உடன் இருந்தனர்.