பெரம்பலூர், ஆக.8: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஆடை வடிவமைப்பியல் துறை மற்றும் வாக் பேரவை இணைந்து தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி பாரம்பரிய திருவிழா நேற்று (7ம் தேதி) பல்கலைக்கழக கூட்டரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமை வகித்தார். மகளிர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரி மாணவிகள், கைகளால் நெய்யப்படும் துணிகளை அணிவதால் நம் உடலுக்கு எவ்வகையில் நன்மை பயக்கும் என்னும் விழிப்புணர்வு நாடகத்தை நடித்துக் காட்டினர். மேலும்,புடவை கட்டும் முறை மற்றும் ஆடை அணிவகுப்பில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தன்னைக் கதாநாயகிகளைப் போல அலங்கரித்து நலிமான நடை கொண்டு மேடையில் வலம் வந்தனர்.
இதில் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தை,தடயவியல் துறையும் இரண்டாம் இடத்தை உயிர்வேதியியல் துறையும் மற்றும் மூன்றாம் இடத்தை மேலாண்மை துறையும் பெற்றனர். தடயவியல் துறை உதவிப் பேராசிரியர் ஆர்ஷா சோஜன் வரவேற்புரை வழங்கினார். நிறைவாக ஆடை வடிவமைப்பியல் துறை உதவிப் பேராசிரியர் ஆயிஷா நன்றி கூறினார். விழாவில் புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள்,பேராசியர்கள் மற்றும் 3,500க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.