ஜெயங்கொண்டம், அக்.7: ஆண்டிமடம் அருகே பொதுப்பாதை பிரச்னையில் முன்விரோதம் காரணமாக கணவன், மனைவியை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவருக்கு நாலரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஜெயங்கொண்டம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்குழி கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் (50), அதே ஊரைச் சேர்ந்த ரவி (44). இவர்கள் இருவரும் உறவினர்கள். இவர்களுக்கிடையே பொதுப்பாதை தகராறு, காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் ரவி பொதுபாதையில் வேலி அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதனை தட்டிக்கேட்ட கோதண்டராமனையும் அவரது மனைவியையும், ரவி மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கோதண்டராமன் அளித்த புகாரின் அடிப்படையில் 2018 டிசம்பர் 24 ம் தேதி ஆண்டிமடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று (அக்.6ம் தேதி) நடைபெற்றது. விசாரணை முடிவில் குற்றவாளி ரவிக்கு நான்காண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் மற்றும் ரூ பத்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.