பெரம்பலூர், நவ.5: பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வளர் இளம் பருவத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பாக பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வளர இளம் பருவத்தினருக்கான வாழ்வியல் திறன் கல்வி மற்றும் பால்வினை நோய் வாழ்வியல் நன்னெறிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆதித்தன் தலைமை வகித்தார். பால்வினை நோய் பற்றியும் அதன் தாக்கங்கள் குறித்தும் வளர இளம்பருவ மாணவ மாணவிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் அவற்றைக் கையாளும் யுக்திகள் குறித்தும், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் பழனிவேல் ராஜா சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், பட்டதாரி ஆசிரியர் சரவணன், முதுகலை தமிழாசிரியர் முரளி, உடற்கல்வி ஆசிரியர் விஜயவேல் மற்றும் அலுவலக பணியாளர்கள் மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
