பாடாலூர், அக். 4: விஜயதசமியன்று கல்வி, கலைகள் என எதைத் தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை. விஜயதசமி தினத்தன்று பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தாளாளர் தமிழ்வாணன் தலைமையில் மாணவர் சேர்க்கை நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் பள்ளியின் இயக்குநர் வளர்மதி முன்னிலை வகித்தார்.
அப்போது பெற்றோர் தங்களது குழந்தையின் கை விரலை பிடித்து, தட்டில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெல்லின் மேல் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ என்ற எழுத்தை எழுத பழகி கொடுத்தனர். பின்னர் அந்த மாணவ, மாணவிகளை எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் சேர்த்தனர். இதை தொடர்ந்து புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு சீருடைகள் பாட புத்தகங்கள், ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் ஆகியவை வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு பஸ் கட்டணம், காலை, மாலை தின்பண்டங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாணவ, மாணவிகள் சேர்ப்பில் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.