பெரம்பலூர், அக்.4: பெரம்பலூர் மாவட்ட பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் 2நாள் மாநில அளவிலான மேசைப் பந்தாட்ட தேர்வுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. 240 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பாக, பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆலோசனையின் பேரில் மாநில அளவிலான மேசைப் பந்தாட்ட (டேபிள் டென்னிஸ்) தேர்வுப் போட்டிகள் நேற்று (3ம் தேதி) துவங்கி இன்று (4ம் தேதி) வரை 2 நாட்கள் நடைபெற்று வருகிறது.
இப்போட்டிகள் மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு தனித் தனியாக பெரம்பலூர் மாவட்ட, பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. போட்டிகளில் கடலூர், கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவள்ளூர், வேலூர் , கன்னியாகுமரி, தேனி, சேலம் ஆகிய 8 மண்டலகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வயது மற்றும் பிரிவு வாரியாக 14 வயதிற்குட்பட்ட ,17 வயதிற்குட்பட்ட, 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொள்ள உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் வயது மற்றும் பிரிவு வாரியாக தலா 5 மாணவ, மாணவிகள் என 30 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேற்று நடைபெற்ற தெரிவு போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 120 மாணவர்களும், பெண்கள் பிரிவில் 120 மாணவிகளும் கலந்து கொண்டனர்.