பெரம்பலூர்,நவ.1: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அவர்களின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் சிறப்புவாய்ந்த திட்டமாக ‘தாயுமானவர்‘ என்றத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் தாலுகாவில் 5129 நபர்களும், ஆலத்தூர் தாலுகாவில் 4102 நபர்களும், குன்னம் தாலுகாவில் 5205 நபர்களும், வேப்பந்தட்டை தாலுகாவில் 4666 நபர்களும் எனமொத்தம் 19102 நபர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின்கீழ் நவம்பர் மாதத்திற்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்களை வருகிற 03,04,05 ஆகிய தேதிகளில் குடிமைப் பொருட்கள் வழங்கப்பட வுள்ளது.
எனவே தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்டக் கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
