Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வழக்கின் முழு கட்டணத்தையும் திரும்ப பெறலாம் சமரச மையத்தில் காணப்படும் தீர்வுக்கு மேல்முறையீடு கிடையாது

பெரம்பலூர்,ஜூலை.24: வழக்குகளுக்கு சமரச மையத்தில் சுமூகமாகத் தீர்வு காணப்பட்டால், முழு நீதிமன்ற கட்டணத்தையும் திரும்பப் பெறலாம். சமரச மையம் குறித்து வாகனம்மூலம் நடத்தப்படும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்து, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பத்மநாபன் பேசினார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, ஜூலை 3ம் தேதி முதல், பெரம்பலூர் மாவட்ட சமரச மையத்தில், நீதிமன்றத்தில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகளின் கோப்புகளை எடுத்து, மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் இடையே உள்ள பிரச்சனைகளை மத்தியஸ்தர்கள் மூலம் சமரசம் செய்து பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியாகத் தீர்வு கண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக 22ம் தேதி முதல் மாவட்டம் முழுமைக்கும் வாகனம் மூலம் நடத்தப்படும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பத்மநாபன் துவக்கி வைத்து, துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் விநியோகித்துப் பேசியதாவது :

பொதுமக்கள் நீதிமன்றங்களில் நீண்ட நாள் நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக தனிநபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்பத்தகராறு, சொத்துத் தகராறு, வாடகைத் தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியத் தகராறு, தொழிலாளர் நலம், உரிமையியல் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் (சமாதானமாக போகக்கூடிய வழக்குகள்) ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக செல்ல ஒரு அரிய வாய்ப்பாக அமைய உள்ளது.

உங்கள் வழக்குகளுக்கு சமரச மையத்தில் சுமூகமாகத் தீர்வு காணப்பட்டால், முழு நீதிமன்ற கட்டணத்தையும் திரும்பப் பெறலாம். உங்கள் பிரச்சனைகளை நீங்களே விரைவாகக் கையாண்டு, சுமூகமாக தீர்வுகளை கட்டணம் ஏதுமின்றி காண முடியும். சமரச மையத்தில் நடைபெறும் அனைத்து பேச்சு வார்த்தைகளும் எந்த வகையிலும் பதிவு செய்யப்பட மாட்டாது, ரகசியம் காக்கப் படும். இதனால் இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலை உருவாகும். சமரச மையத்தில் காணப்படும் தீர்வே இறுதியானது. இதற்கு மேல்முறையீடு கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி, பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முரளிதரக் கண்ணன், சார்புநீதிபதி மோகனப்பிரியா, பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியும், சமரசத் தீர்வு மைய ஒருங்கிணைப்பாளருமான சரண்யா உட்பட அனைத்து நீதிபதிகளும் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள், மத்தியஸ்தர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.