பெரம்பலூர், ஜூலை28: பெரம்பலூரில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு இடையேயான பேச்சுப்போட்டி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.
பெரம்பலூர் - துறையூர் சாலையில் உள்ள மாவட்ட சாரண, சாரணீயர் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த பேச்சுப்போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அளவில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். போட்டிகளை தமிழ் வளர்ச்சித் துறையின் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குனர்(பொ) சுகன்யா தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையே நடந்த பேச்சுப் போட்டிக்கு, அம்மாபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை வாசுகி, குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் அறிவழகன், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சின்னதுரை ஆகியோர் நடுவர்களாக பணிபுரிந்தனர்.
இப்பேச்சுப் போட்டியில் மேலப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு இ- பிரிவு மாணவி சுபஸ்ரீ முதலிடமும், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு அ-பிரிவு மாணவி கோபிகா 2ஆம் இடமும், பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு அ- பிரிவு மாணவி ரம்யா 3-ஆம் இடமும், சித்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 6- ஆம்வகுப்பு மாணவி மகிழினி, வாலிகண்டபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி ஹிதாயத்து நிஷா ஆகிய இருவரும் சிறப்பிடமும் பெற்றனர்.
அதேபோல், பெரம்பலூர் மாவட்ட அளவில் உள்ள கல்லூரி மாணவ, மாணவியருக்கு இடையே நடைபெற்ற பேச்சு போட்டி நடைபெற்றது. இப்பேச்சுப்போட்டியில் பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் செல்வி, பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் ஸ்ரீதர், பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் சுரேஷ் ஆகியோர் நடுவர்களாக பணி புரிந்தனர்.
இதில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை மாணவி ஹரிணி ஸ்ரீமுதலிடமும், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை 2ஆம் ஆண்டு மாணவி சக்திதேவி 2ஆம் இடமும், வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை 2ஆம் ஆண்டு மாணவி கண்மணி 3ஆம் இடமும் பெற்றனர்.