பாடாலூர், ஜூலை 30: பெரம்பலூர் எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் ஏரிக்கு செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக நேற்று காலை பாடாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவன் மகன் முருகவேல் (34) பிடித்து விசாரித்தனர். அப்போது, அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 300 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.