பெரம்பலூர், ஆக.2: குறுவட்ட மாணவி களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் பெரம்பலூர் அரசு பள்ளி முதலிடம் பெற்றது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பாக பெரம்பலூர் குறுவட்ட அளவில் உள்ள பள்ளிகளுக்கு இடையேயான மகளிர் கால்பந்தாட்ட போட்டி நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆலோசனையின்பேரில் பேரில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பெரம்பலூர் குறுவட்ட அளவில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
14 வயதுக்குட்பட்ட, 17 வயதுக்குட்பட்ட, 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த கால்பந்தாட்ட போட்டிகளுக்கு, பெரம்பலூர் குறுவட்ட அளவிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாகக் கலந்து கொண்டு, போட்டிகளை முன்னின்று நடத்தினர்.
இதில், 14-வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில், பெரம்பலூர் மரகதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், லாடபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி 2ஆம் இடமும் பெற்றன. 17-வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல் நிலைப்பள்ளி 2ஆம் இடமும் பெற்றன. 19-வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி 2ஆம் இடமும் பெற்றன.