Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பெரம்பலூர் மாவட்டத்தில் தொகுப்பூதியத்தில் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

பெரம்பலூர், ஜூலை 29: பெரம்பலூர் மாவட்டத்தில்ஆதிதிராவிடர் நலத்துறையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத் துறையின்கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நிலையில் காலிப் பணியிடங்களாக உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளான ஒகளுர், நத்தக்காடு, அய்யனார் பாளையம், நெய்க்குப்பை, அ.மேட்டூர், குரூர், செ.மாவிலங்கை பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் உள்ளது. பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக நியமனம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

பணியில் சேர விரும்பும் விண்ணப்ப தாரர்கள் தங்களது எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்று நகல்களுடன் இணைத்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பெரம்பலூர் -621212 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். ஆசிரியர் தகுதித்தேர்வு D.T.Ed., (or) B.Ed., முடித்திருத்தல் வேண்டும். தற்காலிக இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 வீதம் ஊதியம் வழங்கப்படும். தற்காலிக இடைநிலை ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை வருகிற 31ம் தேதிக்குள், பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கிடைக்குமாறு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த பணி நாடுநர்கள் இடைநிலை ஆசிரியர் நிலையில் இருப்பின், ஆசிரியர் தகுதித்தேர்வு (TET PAPER - I) தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்களாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். அவ்வாறு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடத்திற்கு மேற்கண்ட காலத்திற்குள் (மாதத்திற்குள்) பதவி உயர்வு மூலமாகவோ அல்லது நேரடி நியமனம் மூலமாகவோ அல்லது மாறுதல் மூலமாகவோ நிரப்பப்படின் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்யப்பட வேண்டும்.

இந்நியமனமானது முற்றிலும் தற்காலிகமானது எனவும், மாறுதல் / முறையான நியமனங்களின் மூலம் காலிப்பணியிடம் பூர்த்தி செய்யப்படும் அன்றே தற்காலிக ஏற்பாட்டின் பேரில் பணியமர்த்தப்பட்டவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார். மேலும் அன்னாரது பணி மற்றும் நடத்தை திருப்தி இல்லையெனில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். காலிப் பணியிடங்களுக்கு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இப்பணியில் நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல்-2026 முடிய உள்ள மாதங்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக வளாகத்தின் கீழ்தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.