Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

செங்குணம் மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா

பெரம்பலூர், ஜூலை 29: பெரம்பலூர் அருகே செங்குணம் மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்துச்சென்றனர். மாலையில் தேர் நிலையை வந்தடைந்தது. பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டத் திருவிழா கடந்த 13, 16, 19 ஆகிய 3 தினங்களில் பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன், 20ம்தேதி இரவு சுவாமி குடி அழைத்து, காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. கடந்த 21ம் தேதி முதல் 26 ம்தேதி வரை தினமும் இரவில் சுவாமிக்கு மண்டல அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து, சிறப்பு வழிபாடு, பின்னர் அன்னம், மயில், சிம்மம், பல்லக்கு உட்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. 27ம் தேதி காலையில் பக்தர்கள் சுவாமிக்கு பால் குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்து, அங்கப்பிரதட்சணை செய்தனர்.

மாலையில் அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி, தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவில் பொங்கல், மா விளக்கு பூஜையுடன் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வெட்டுக் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று (28ம் தேதி) காலை தொடங்கியது. இதற்காக செங்குணம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து பொதுமக்கள் 2 வெள்ளை குதிரைகளில் சீர் எடுத்து வந்து அம்மனுக்கு திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தேரில் அம்மனை ஏற்றி தேரோட்டம் நடைபெற்றது. சிவன் கோயில்தெரு, பஜனை மடத் தெரு, நடுத்தெரு, கனரா வங்கித் தெரு வழியாக பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து சென்றனர். மாலையில் மீண்டும் தேர் நிலையை வந்தடைந்தது.

விழாவில் செங்குணம், சிறுகுடல், கீழப்புலியூர், நமையூர், பாலாம்பாடி, அருமடல், கவுள்பாளையம், சித்தளி, பேரளி, துறை மங்கலம், அரணாரை, நொச்சியம் உட்பட பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், சிங்கப்பூர், தூபாய் நாடுகளில் இருந்தும், அரியலூர், திருச்சி என பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் தேர் திருவிழா நிறைவடைகிறது.