ஜெயங்கொண்டம், செப்.30: கங்கைகொண்டசோழபுரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம இளைஞர்கள் கட்டிடப்பணியை முற்றுகையிட்டனர். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் புதிய ரேஷன்கடை கட்டும் பணியை சில தினங்களுக்கு முன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்நிலையில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து ரேஷன் கடை கட்டப்படுவதாகவும், இதனால் பொதுப்பாதை குறுகி அங்கே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் அன்னாபிஷேக மண்டபத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்படும், மேலும் பொதுமக்கள் பாதசாரிகள், வாகனங்கள் செல்ல முடியாத நெருக்கடி ஏற்படும் எனக் கூறி அக்கிராம இளைஞர்கள் கட்டிட பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்பாக முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அரசே சட்ட விரோதமாக பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றும், எனவே உடனடியாக பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே இருந்த பழைய இடத்திலேயே ரேஷன் கடை கட்ட வேண்டும் என்றும், இளைஞர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
+
Advertisement