Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மார்கழி பிறப்பு, பொங்கல் பண்டிகை வருவதால் வண்ண கோலபொடி தயாரிக்கும் பணி தீவிரம்

பெரம்பலூர்,டிச.15: நாளை மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு வீட்டு வாசல்களை அலங்கரிக்கும் வண்ண கோலமாவு தயாரிக்கும் பணிதிவிரம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்காக பெரம்பலூரில் டன் கணக்கில் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர்.

தமிழ் மாதங்களில் பண்டிகைகளை சுமந்து வரும் பக்திப் பரவசம்மிக்க மாதங்களாக கருதப்படுவது கார்த்திகை, மார்கழி, தை மாதங்களாகும். தீபத் திருவிழாவிற்கு பிறகு கார்த்திகை மாதம் இன்றோடு(15ம்தேதி) முடிவடைந்து, நாளை (16ம் தேதி) பக்தி மனம் பரப்பும் மார்கழி மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெண்கள் வாசலில் வண்ணக் கோலமிட்டு அலங்கரிப்பது வழக்கம். அதோடு டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையும், ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 14ம் தேதி தை மாதமும் பிறக்க உள்ள நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, வாசல்களில் வண்ணக் கோலங்கள் இட்டு அலங்கரிக்க ஏதுவாக, வண்ணக் கோலப்பொடிகள் தயாரிப்புப் பணிகள் பெரம்பலூரில் தீவிரம் அடைந்துள்ளன.

கோலமாவு கோகிலா என்ற பிரபல திரைப்படத்தின் பெயருக்கு முன்னாலேயே, பெரம்பலூரில் கோலமாவு என்றால் ஞாபகத்துக்கு வருவது கோலமாவு ஜீவானந்தம் தான். காரணம் படிக் கணக்கில் கோலமாவு விற்பனை செய்யும் கடைகளுக்கு இடையே, டன் கணக்கில் கோலமாவு உற்பத்தி செய்து, 5 மாவட்டங்களுக்கு சப்ளை செய்யும் ஜீவனந்தம்தான் கோலமாவு என்றதும் எல்லோர் மனதிலும் நினைவுக்கு வருகிறார்.

பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டு, பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம்(67). இவரது மனைவி அனுஷியா(60), மகன் கார்த்திகேயன்(41). பேரப்பிள்ளைகள் தருண், வருண் ஆவர். இவர்கள் கடந்த 17 ஆண்டுகளாக வண்ணக் கோலமாவு தயாரித்து விற்பனை செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சாதாரண வெள்ளை கோல மாவினை சேலத்தில் 15 டன் முதல் 20 டன் வரை வாங்கி வந்து, ஈரோடு, கோவை பகுதிகளில் இருந்து கலர் லிக்யூட் - டையாக வாங்கி வந்து, மிக்சிங் மெஷினில் போட்டு கலந்துஎடுத்து காய வைத்து, சலித்து தலா 200 கிராம் பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்து வருகிறார்.

வாசனையறிந்து ஈக்கள் வருவது போல், வண்ணங்கள் அறிந்து பல கடை உரிமையாளர்கள், வீட்டு வாடிக்கையாளர்கள் ஜீவானந்தம் வீட்டை தேடிச் சென்று, வண்ணக் கோலமாவு பொடிகளை வாங்கிச் செல்லுகின்றனர். ஆரம்பித்த 15ஆண்டுகளாக கைகளில் கெமிக்கல் டையை க்ளவுஸ் போட்டுக் கொண்டு தயாரித்து வந்தவர் கடந்த 2023ம் ஆண்டு முதல் யூடியூபில் பார்த்து வியந்த மெஷினை சேலம் மாவட்டத்தில் இருந்து ஆர்டர் சொல்லி வாங்கி வந்து வண்ணக் கோலமாவுகளைத் தயாரித்து வருகிறார். வானவில் வண்ணம் ஏழு என்றாலும் ஜீவானந்தம் தனது கைவண்ணத்தில் 20 முதல் 30 வகை கலர்களில் கோலமாவு தயாரித்து, 200கிராம் பாக்கெட் வீடுகளில் இருந்து வாங்க வருவோருக்கு ரூ.7க்கும், மொத்தமாக வாங்க வரும் வியாபாரிகளுக்கு பாக்கெட் ரூ.6க்கும் விற்பனை செய்கிறார்.

கார்த்திகை மார்கழி தை மாதங்களில் வியாபாரம் நல்ல உச்சத்தை எட்டும் என தெரிவிக்கும் ஜீவானந்தம் ஆண்டின் 12 மாதங்களும் எங்களிடம் கலர் பொடி கிடைக்கும். பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி கடலூர், தஞ்சை, அரியலூர், திருவையாறு, திருச்சி, லால்குடி, ரங்கம், திட்டக்குடி, பகுதியில் இருந்து மொத்த வியாபாரிகள் நேரில் வந்து கலர் கோலமாவு வாங்கிச் செல்கின்றனர். மொத்தத்தில் மார்கழி, கிறிஸ்மஸ், ஆங்கில புத்தாண்டு, வாசல் பொங்கல், மாட்டுப்பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் பல்லாயிரம் வீட்டு வாசல்களில் அலங்கரிப்பது ஜீவானந்தத்தின் கை வண்ணத்தில் உருவான வண்ணக் கோல மாவுகள் என்பது பெரம்பலூருக்கு பெருமை சேர்ப்பதாகவே உள்ளது.